திருச்சி: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் பல்வேறு கட்சியிலிருந்து விலகிய 500க்கும் மேற்பட்டோர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி, திருச்சி சுப்பிரமணியம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாவது, “தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழக முழுவதும் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்தியாவின் நான்காவது தூணாக இருக்கக்கூடிய ஊடகத்தை வஞ்சிக்கும் விதமாக ஆனந்த விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டு இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மும்மொழிக் கொள்கை மோசடி, ஏமாற்றும் கொள்கையாகும். தாய்மொழி கொள்கை தான் உலகத்தில் தலைசிறந்த கொள்கை. தற்போது ஆங்கிலம் உலகம் முழுவதும் பேசும் மொழியாக இருப்பதால் அதனை கற்று கொள்ள வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொல்லும் தமிழ்நாட்டில் எங்கே தமிழ் என்று தேடுகின்ற நிலைமை இருக்கிறது.
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது:
தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே உணவு என்பதை தமிழ் தேசியம் ஏற்று கொள்ளாது. இந்தி, ஆங்கிலம் படித்து பட்டம் பெறலாம் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப்போர் நடத்தும் அளவிற்கு நிலமையை உருவாக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள கூடாது” என்றார்.
இதையும் படிங்க: “ஃபாசிச அணுகுமுறைகளை யார் கையில் எடுத்தாலும் எதிர்போம்” - தவெக தலைவர் விஜய் காட்டம்! |
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதனால் பல குற்றச்சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்கின்றன. இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குத் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்கும் கடுமையான சட்ட மசோதாவை வருகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு ல்.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.
TVK தலைப்பு யாருக்கு?
தமிழக வாழ்வுரிமைக் கட்சி, TVK என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் தற்போது விஜயின் கட்சியையும் TVK என்று பதிவு செய்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எதற்காக கட்சி ஆரம்பித்தார்? மக்கள் நலனுக்காக ஆரம்பித்தாரா? அல்லது அவருக்கு பின்னால் இருந்து யாரோ தூண்டுதலின் பேரில் கட்சி ஆரம்பித்தாரா? என்பது வருகின்ற காலங்களில் முழுமையாக தெரியவரும்.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றை தடுப்பதற்கு காவல்துறை மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு என்பது எங்களது கோரிக்கை, மதுவிலக்கு என்பது எங்களது கொள்கை” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.