தேனி: கடமலைக்குண்டு கிராம சாலையில் கிடந்த 2 பவுன் தங்கம் மோதிரங்கள் மற்றும் 10ஆயிரம் ரூபாயை கண்டெடுத்த முதியவர்கள் அதனை போலீசிடம் ஒப்படைத்தனர். அவர்களின் இந்த நேர்மையை பாராட்டி முதியவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கி போலீசார் கெளரவித்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு கிராமத்தில் தனிக்கொடி,பொன்னையா ஆகிய இரண்டு முதியவர்கள் தள்ளுவண்டியில் நிலக்கடலை வியாபாரம் செய்து வருகிறார்கள். நேற்று (பிப்ரவரி 15) அவர்கள் இருவரும் வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, சாலையில் ஒரு பை கிடந்துள்ளது. அந்த பையை எடுத்துப் பார்த்தபோது அதனுள் இரண்டு பவுன் மதிப்புள்ள 2 தங்க மோதிரங்கள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 500 ரொக்க பணமும் இருந்துள்ளது.
இதுகுறித்து முதியவர்கள் இருவரும் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர். அதன் பின்னர், நகை மற்றும் பணத்தை கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். நகையை பெற்றுக்கொண்ட துணை ஆய்வாளர் பிரேமானந்தன், நகை யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.
இதற்கிடையே, கடமலைக்குண்டு அருகே டாணாதோட்டம் பகுதியை சேர்ந்த, கூலி வேலை செய்யும் பெண் துர்க்கையம்மாள் என்பவர், தனது நகை மற்றும் பணத்தை காணவில்லை என புகார் அளிப்பதற்காக கடமலைக்குண்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். இதில், அப்பெண்ணிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முதியவர்கள் கொண்டுவந்த நகை மற்றும் பணம் அவருடையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நகை மற்றும் பணத்தை பறிக்கொடுத்த பெண்ணிடம், அதனைக் கண்டெடுத்த முதியவர்கள் மூலமாகவே போலீசார் அவற்றை ஒப்படைத்தனர். காணாமல் போன நகை மற்றும் பணம் கிடைத்த மகிழ்ச்சியில், முதியவர்களின் காலில் விழந்த அந்தப் பெண், அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். முதியவர்களின் நேர்மையை பாராட்டி அவர்களுக்கு போலீசார் ரொக்க பரிசு கொடுத்தும், சால்வை அணிவித்தும் கௌரவித்தனர்.