சென்னை: படிப்புக்காக கொடுக்கப்பட்ட நன்கொடையில் வந்த இடம் இது கிடையாது. நீங்கள் எனக்கு கொடுத்த வாய்ப்பு, அதன் வருமானத்தில் இருந்து கட்டப்பட்ட கட்டிடம் தான் இது என அகரம் அறக்கட்டளையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அகரம் அறக்கட்டளை (Agaram Foundation) என்ற பெயரில் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், சென்னை தி நகரில் அமைந்துள்ள அகரம் அறக்கட்டளையின் புதிய அலுவலகத்தை சூர்யா இன்று திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, 2006 ஆம் ஆண்டு ஒரு சிறிய விதையில் ஆரம்பிக்கப்பட்டு இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. ஞானவேல் கேட்ட கேள்வி அகரம் அறக்கட்டளை உண்டாக காரணமாக இருந்தது. அரசு பள்ளியில் படித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு உதவிடும் வகையில் 2010 ஆம் ஆண்டு 'விதை' என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ”கரெக்ட்டா சம்பளம் வந்தது, அதைவிட அதிகமாக மரியாதை”... ’அமரன்’ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு! |
இந்த திட்டத்தின் கீழ், இதுவரையில் 5 ஆயிரத்து 813 முதல் தலைமுறை மாணவர்கள் படித்து முடித்துள்ளனர். தற்போது 2000க்கும் அதிகமானோர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில், 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் மாணவிகள். 2010- இல் நூறு மாணவர்களை படிக்க வைக்க ஆசைப்பட்டோம். அப்போது 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. தற்போது 700 மாணவர்களை படிக்க வைத்து கொண்டிருக்கிறோம். தற்போதும் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், தேவைகள் மட்டும் குறையவே இல்லை. 2025-லும் நமது சமூகத்தில் முதல் தலைமுறை மாணவர்கள் உள்ளனர். சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட, இந்த விழா அதிக சந்தோஷத்தை தருகிறது. இது படிப்புக்காக கொடுக்கப்பட்ட நன்கொடையில் கட்டப்பட்ட கட்டிடம் கிடையாது. நீங்கள் எனக்கு கொடுத்த வாய்ப்பு, அதன் வருமானத்தில் இருந்து கட்டப்பட்ட கட்டிடம். நன்கொடையாக வருகின்ற பணம் படிப்புக்காக மட்டுமே செலவிடப்படுகிறது. இந்த சேவை மக்களுக்காக செய்யப்படுவதாக உணர்கின்றேன்." சூர்யா கூறினார்.
பின்னர் ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் பேசும்போது, "அகரம் தனிமனிதனுடையதாக இருக்கக்கூடாது என்பது தொடங்கத்திலிருந்து சூர்யாவின் சிந்தனையாக இருந்தது. அகரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கானது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மட்டும் இதில் பயனடைந்து வருகின்றனர்.” என்றார்.