தொடர் விடுமுறை எதிரொலி..! ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்..!
🎬 Watch Now: Feature Video
Published : Dec 25, 2023, 5:38 PM IST
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமாக உள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றான ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரியாக உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, ஒரு அருவியாக இல்லாமல் பல அருவிகளின் தொகுப்பாகத் திகழ்கிறது.
இந்த நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்கத் தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாப்பயணிகள் அருவியின் எழிலை ரசிப்பது மட்டுமில்லாமல், அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்வதுண்டு.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை எனத் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு இன்று (டிச.25) காலை முதல் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பரிசல் சவாரி செய்தும், தொங்கு பாலத்தின் மீது இருந்து கொட்டும் அருவிகளை ரசித்தும், மெயின் அருவி மற்றும் சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர். பின்னர் இங்கு பிரசித்தி பெற்ற மீன் சமையலை ருசித்து விடுமுறையைக் கொண்டாடினர்.