தருமபுரி சிப்காட்டில் தொழில் செய்ய விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அமைச்சர் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ரூ.15.99 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.1.83 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து 524 பயனாளிகளுக்கு ரூ.5.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டப்பட்டு வரும் கூடுதல் அலுவலகத்தினை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டடம் ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான கூடுதல் கட்டட பணிகள் முடிகின்ற தருவாயில் உள்ளன. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
அதே போல் தருமபுரியில் உள்ள சிப்காட் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் விரைவில் திறக்கப்படவுள்ளது. அதற்காக இன்று முதல் 200 ஏக்கர் நிலம் இணையதளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு தொழில் செய்ய விரும்புவோர், இணையதளம் மூலமாக இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம்.
கலசபாடி - வாச்சாத்தி இணைப்புசாலை ரூ.12 கோடி மதிப்பில் அமைப்பட உள்ளது. வெண்ணாம் பட்டி பாரதிபுரம் இணைப்பு பாலம் ரூ.33 கோடியில் அமைக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி, எம்பி ஆ.மணி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.