தமிழகம் முழுவதும் மது பாட்டில்களை உடைக்கும் போராட்டம்: டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவிப்பு
🎬 Watch Now: Feature Video
தேனி: தேனியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தனியார் விடுதியில் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி, ஜூலை 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு மதுபான பாட்டில் உடைப்பு போராட்டம் நடத்தப்படும். மதுவினால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பின்னோக்கி சென்று வருகிறது.
தமிழகத்தில் 60 சதவீதமான பேர் மதுவிற்கு அடிமையாகி இருக்கின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் கையெழுத்து டாஸ்மாக் மூடுவதற்கானதாக இருக்கும் என்று கூறியது. டாஸ்மாக் எதிராகப் பல போராட்டங்களை நடத்தியது ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு நேர் எதிராகச் செயல்பட்டு வருகிறது.
காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்த அமைச்சரின் பேச்சு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கட்டிட வேலைக்குச் செல்லும்போது, அவர்களைக் குடிக்க வைத்துத் தான் வேலைக்கு அனுப்புவோம் என்று கூறுவது போல் இருக்கிறது. மேலும் மது குடித்து வேலை பார்க்கும் கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழந்தால் அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்வாரா" என்று கேள்வி எழுப்பினார் கிருஷ்ணசாமி.
தொடர்ந்து பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைத்தனர். ஆனால் இப்போதைய திமுக அரசு கொள்கை இல்லாமல் டாஸ்மாக் நேரத்தை அதிகரித்து தமிழகத்தை பின்னோக்கியே கொண்டு செல்கிறது.
தமிழக இளைஞர்கள் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாத காரணத்தினால் தான், வெளி மாநில இளைஞர்கள் அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை, நாங்கள் எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருக்கிறோம்" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.