150 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோயில் கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை!
🎬 Watch Now: Feature Video
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் நெசவாளர்களால் அமைக்கப்பட்ட சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் 150 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில் பல இடங்களில் கட்டிடங்கள் சேதம் அடைந்து, மேல் கூரை பழுதடைந்தும், விரிசல் ஏற்பட்டும் காணப்படுகிறது. பல இடங்களில் சுவரின் மேற்பூச்சுகள் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளன.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீது பூச்சுகள் விழுந்து அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, கோவில் நிர்வாகிகள் நடையைப் பூட்டி வைத்துள்ளனர். கோயில் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்றும் அறநிலைதுறையிடம் கோயில் நிர்வாகிகள் கோரியிருந்தனர். ஆனால், ஒரு மாதமாகியும் அறநிலையத்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனால், கோயில் பூஜை புனஸ்காரங்கள் இன்றி பூட்டிக் கிடக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலை அறநிலைத்துறையினர் உடனடியாக சீரமைத்து பக்தர்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.