உயிருக்குப் போராடிய தந்தையைக் காண சென்ற மகனிடம் அபராதம் விதித்த போலீஸ் - தீக்குளிக்கப் போவதாக ஆடியோ வெளியீடு - தந்தையை காணச் சென்ற மகனுக்கு அபராதம்
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தந்தையைப் பார்க்க சென்றபோது மருத்துவமனை வாசலில் வைத்து, மகனிடம் காவல் துறையினர் அபராதம் விதித்ததால், மன உளைச்சலில் மகன் தீக்குளிக்கப் போவதாக ஆடியோ வெளியிட்டுள்ளார்.
பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகே உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர், நல்லதம்பி. இவர் தனியார் ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனத்தின் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தைக்கு நேற்று (மார்ச். 04) விபத்து ஏற்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தையைக் காண்பதற்காக நல்லதம்பி அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அப்போது, மருத்துவமனை வளாகத்திற்கு வெளியில் நின்றிருந்த காவல் துறையினர், நல்லதம்பியின் வாகனத்தை மறித்து, சாலை விதியை மீறியதாக 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலால் நாளை (திங்கள் கிழமை) ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் முகாமின்போது தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக நல்லதம்பி ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும், தன்னை சாதி பெயர் சொல்லி காவல் துறையினர் அவமதித்ததாகவும், ஏற்கனவே தந்தை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி வரும் நிலையில் தன்னால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த முடியாது என்றும் நல்லதம்பி வேதனையோடு தெரிவித்துள்ளார்.
என்னதான் சட்ட திட்டங்கள் இருந்தாலும் மருத்துவமனை வாசலில் வைத்து காவல் துறையினர் அபராதம் விதிப்பதா என கேள்வி எழுந்துள்ளது. மருத்துவமனை என்றாலே எல்லோரும் ஏதோ ஒரு மன கஷ்டத்தில் தான் இருப்பார்கள்; எனவே அங்கு வைத்து நல்லதம்பியிடம் காவல் துறையினர் அபராதம் விதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாமக மகளிர் அணி தலைவி உயிரிழப்பில் திடீர் திருப்பம் - தகாத உறவால் நடந்த கொலை!