காய்கறி சந்தைக்குள் திடீரென கார் புகுந்த சம்பவத்தில் 3 பேர் படுகாயம் - கோவையில் பரபரப்பு! - காய்கறி சந்தையில் விபத்து
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவை வடவள்ளி பேருந்து நிலையம் அருகே ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 13) மாலை வழக்கம் போல சந்தை போடப்பட்டது, அப்போது அவ்வழியாக மருதமலை நோக்கிச் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் போடப்பட்ட சந்தை காய்கறி கடைக்குள் புகுந்தது. இதில் அங்கு இருந்த மூதாட்டி மற்றும் வட மாநில தொழிலாளர்கள் என மூன்று பேர் காயம் அடைந்தனர். இதைடுத்து அங்கு இருந்தவர்கள் மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை சந்தையில் 6 மணிக்கு மேல் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் சந்தைகளுக்கு வருவது வழக்கம், முன்னதாக விபத்து ஏற்பட்டதால் பெரும் அவம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. விபத்து தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநரான வடவள்ளியை சேர்ந்த கனிராஜ் (57) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.