தஞ்சாவூரில் விநாயக சதுர்த்தி ப்ரமோத்ஸவத்தை முன்னிட்டு ஊஞ்சல் சேவை..!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 24, 2023, 7:12 PM IST
|Updated : Sep 24, 2023, 10:58 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மஹாகணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி கடந்த 8ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 9ஆம் தேதி கொடியேற்றப்பட்டு தினமும் வேதபாராயணம், திருமுறைபாராயணம் ஆகியவையும் யானை வாகனம், சிம்ம வாகனம், அலங்கார சப்பரத்தில் ஸ்ருஷப வாகன காட்சி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மேலும் தேர்த் திருவிழா, தீர்த்தவாரி ஆகியவையும் நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸப்தாவரணம் எனும் ஏழு முறை சுவாமி பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் ஏழு ஸப்தாவரணங்களாக நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஸ்ரீ மஹாகணபதி ஊஞ்சல் சேவை நேற்று (செப் 23) இரவு நடைபெற்றது. முன்னதாக பொதுமக்கள் முறுக்கு, மைசூர்பாகு, லட்டு, ஜாங்கிரி, அதிரசம் உள்ளிட்ட இனிப்பு வகைகளை சீர்வரிசைப் பொருட்களாக கோயிலுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் ராஜ அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் எழுந்தருளிய ஸ்ரீ மஹாகணபதிக்கு பொதுமக்கள் வெண்சாமரம் வீச, பக்தர்கள் பஜனை பாட்டு பாடினர். மேலும், சாஸ்த்ரா கல்லூரி மாணவர்கள் நாம சங்கீர்த்தனம் பாடினர்.
மேலும், கொடிமரத்தில் உள்ள மஹாகணபதிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் சிறப்பாக நடைபெற்று பூஜைகள் செய்யப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். மேலும், விடையாற்றி விழா மற்றும் உற்சவமூர்த்திக்கு அபிஷேகம் ஆஸ்தான பிரவேசம் ஆகியவையும் நடைபெற உள்ளது.