PTR TAPE 2: அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ! - பழனிவேல் தியாகராஜன்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தான் பாஜக தலைவராகப் பொறுப்பேற்றது முதல் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனிடையே, அவர் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து ரஃபேல் வாட்ச் பில் உடன், திமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என நாள் கெடுவும் அண்ணாமலை விடுத்திருந்தார்.
இதனையடுத்து கடந்த 14ஆம் தேதி, DMK Files என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சில திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதற்கு, அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளிடுவேன் எனக் கூறிய நிலையில், சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார் என்று பல்வேறு திமுக அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.
அதேநேரம், அண்ணாமலை மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதற்கு அண்ணாமலை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்பான ஆடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.
இதற்கான விளக்கத்தையும் அமைச்சர் பிடிஆர் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் PTR TAPE 2 என்ற பெயரில் ஒரு ஆடியோவை அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் முதலமைச்சரின் மகன் மற்றும் மருமகன் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பேசி உள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.