குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!
Published : Dec 17, 2023, 12:42 PM IST
|Updated : Dec 17, 2023, 1:40 PM IST
தென்காசி: தென் மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத் தலமான குற்றால அருவி, தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் சீசன் களைகட்டும்.
தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், காலை முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருகபக்தர்கள் குற்றால அருவியில் புனித நீராடி வந்தனர்.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் தற்போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தற்போது குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை குறைந்து குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .