''உன் ஆட்டோவுக்கும் என் ஆட்டோவுக்கும் சோடி போட்டு பார்த்துக்கலாமா சோடி'' - ஆட்டோ ரேஸின் பகீர் பின்னணி - chennai news
🎬 Watch Now: Feature Video
சென்னை: சென்னை, புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோ ரேஸ் நடைபெற்றதாக ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு ரகசியத் தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட போக்குவரத்து போலீசார், செங்குன்றம் முதல் நெமிலிச்சேரி வரையிலான வெளிவட்ட சாலையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டது உறுதியானது.
இதனையடுத்து வெளிவட்ட சாலையில் பொருத்தப்பட்டிருந்தக் கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்டது வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன், அஸ்லாம் கான், சாலமன் தேவகுமார், தாமோதரன் (என்ற) அர்ஜுன் ஆகிய நான்கு பேர் எனத் தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யார் நல்ல மெக்கானிக் என உறுதி செய்ய இந்தப் போட்டியானது நடைபெற்றுள்ளது.
மேலும் இவர்கள், சொற்ப பணமான 3 ஆயிரம் ரூபாயை வைத்து ஆபத்தான முறையில் ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இந்த ஆட்டோ பந்தயத்தில் வெற்றி பெறும் மெக்கானிக்களுக்கு அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களாம். சிறந்த மெக்கானிக் எனப் பெயர் பெற்றால் ஆட்டோக்களைத் தயார் செய்ய அதிக அளவில் வியாபாரம் நடக்கும் என்பதால், தங்களுக்குள் யார் சிறந்த மெக்கானிக் என நிரூபிக்க இந்தப்போட்டி நடைபெற்றுள்ளது எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அதிகாலை 4.30 மணிக்கு ஆட்டோ ரேஸில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதில் சட்டவிரோதமாக பரபரப்பான சாலையில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லும் அதிர்ச்சியான காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் முக்கிய சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை தரும் விதமாக ஆட்டோவை வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபடும் காட்சிகள் ஆதாரமாக கிடைக்கப் பெற்றுள்ளன.
இவர்களிடமிருந்து நான்கு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், ரேஸில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர். வெளிவட்ட சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டதும் வெளியான சிசிடிவி காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.