பட்டப்பகலில் 150 சவரன் கொள்ளை.. ஈரோட்டில் ஆந்திர இளைஞர் சிக்கியது எப்படி? - ERODE POLICE
🎬 Watch Now: Feature Video
Published : Oct 2, 2023, 10:58 PM IST
ஈரோடு: ஈரோட்டில் பட்டப்பகலில் ஆடிட்டர் வீட்டிலிருந்து 150 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் குற்றவாளியான வெளிமாநில இளைஞரைக் கைது செய்து அவரிடமிருந்த நகைகளைப் பறிமுதல் செய்தனர். இவர் 40-க்கும் மேலான கொள்ளை வழக்கில் தேடப்பட்டவர் ஆவார் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு நசியனூர் சாலையில் உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் ஆடிட்டர் துரைசாமி. இவரது மனைவி சுப்புலட்சுமி. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இவ்விருவரும் நாடார்மேட்டில் உள்ள மாமியாரின் வீட்டிற்குச் சென்றபோது, வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 150 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடக்கு காவல்நிலைய போலீசார், குற்றவாளிகளை வலைவீசித் தேடி வந்தனர்.
இது தொடர்பாக, ஆந்திர மாநிலம் ஏழுர் பகுதியைச் சேர்ந்த மலுகுண்டா அனில்குமார் என்பவரைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 150 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், 'கைது செய்யப்பட்ட அணில் குமார் மீது கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இவரை பிடிப்பதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களையும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளையும் விசாரணை நடத்தியுள்ளதாகவும்' தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் காவல்துறையினருக்குப் பெரிதும் உதவிக் கரமாக இருந்தது சிசிடிவி கேமரா என்பதால், பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் சிசிடிவி கேமராவை பொறுத்தி காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த கைது சம்பவத்தில், 'போலீசாருக்கும் சிசிடிவி மிகவும் உறுதுணையாக இருந்ததால், தங்கள் பகுதியில் எல்லா வீடுகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் எனப் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருவதாகவும்' அவர் கூறினார்.