Covai: ரேஷன் கடையில் புகுந்து அரிசியைத் தின்ற காட்டு யானைகள்!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: மருதமலை வனப்பகுதியில் தற்போது ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வழக்கம். கடந்த 10 நாட்களாக மருதமலைப் பகுதியில் 5க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி வருகின்றன.
இந்த யானைகள் பாரதியார் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் புகுந்து வருவதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் அவசியம் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும்; அதுபோல் நடைபயிற்சி செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு யானைகள் மருதாபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து அரிசியை சாப்பிடுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் இரு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருதமலை, நவாவூர், கல்வீரம்பாளையம், சோமையம்பாளையம் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு 8 மணிக்கு எல்லாம் யானைகள் வந்து விடுவதால் வெளியே செல்ல அச்சமாக உள்ளது.
எனவே, யானைகள் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும்போது மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினால் மட்டுமே இதற்குத் தீர்வு ஏற்படும். யானைகள் நடமாட்டத்தால் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக'' அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனிடையே காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவை உடைத்து அரிசியை சாப்பிடும் செல்போன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.