பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி புதுச்சேரி அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போராட்டம்! - Ambulance Drivers strike in Puducherry
🎬 Watch Now: Feature Video
Published : Sep 4, 2023, 1:58 PM IST
புதுச்சேரி அரசு சுகாதார துறையில் பணியாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசு சுகாதார துறையின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி அரசு சுகாதார துறையில் பணியாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், வழங்கப்படும் ஊதியத்தை மாதத்தோறும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செப். 4) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் முதல் கட்டமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், புதுச்சேரி சட்டமன்றம் அருகில் உள்ள சுகாதார துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 11ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.