'விவசாயத்தை மறந்த நாடு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை' - அப்துல் கலாமின் உதவியாளர் பேச்சு - அப்துல் கலாம் உதவியாளர் பேச்சு
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையில் விவசாயம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு தீம் பாடல் வெளியீடு மற்றும் ‘நம்ம உழவன்’ எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உதவியாளர் பொன்ராஜ் பங்கேற்று விவசாயத்தை மறந்த நாடு, விவசாயத்தை துறந்த நாடு என்றைக்கும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்று பேசினார்.
கல்வி பயிலும் மாணவர்கள் மருத்துவம் இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்ப படிப்புகளில் கவனம் செலுத்தும் நிலையில் கிராமப்புறங்களில் நடைபெறும் முக்கிய தொழிலான விவசாயத்தின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. நாளுக்கு நாள் விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில் விவசாயம், அதை சார்ந்த படிப்புகளுக்கான ஆர்வத்தை மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் ‘நம்ம உழவன்’ எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையை அடுத்த லட்சுமிபுரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பங்கேற்று உழவர்களுக்கான சிறப்பு தீம் பாடலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பொன்ராஜ் பேசியதாவது, “முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கண்ட கனவு மாணவர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும். இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு தான் பிரச்னை. ஏனென்றால் அரசு பார்த்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தினால் தான் இன்ஜினியர்களுக்கு வேலை; இல்லையென்றால் வேலை இல்லை. இதுதான் தற்போதைய சூழல்” என்றார்.
மேலும், விவசாயத்தை மறந்த நாடு, விவசாயத்தை துறந்த நாடு என்றைக்கும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்று கூறினார். உழவர்களை முன்னெடுத்துச் சென்றால் டாக்டர் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியா விரைவில் மலரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை கலைஞர் அறந்தாங்கி நிஷா, நாகை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் ராகவன் குத்தாலம் சாதிக் பாட்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அனுப்பப்பட்ட மெயிலை Undo செய்வது எப்படி.? அட்டாச்மென்டை செய்ய மறந்தாலும் மாற்றலாம்.. புதிய டிப்ஸ்..