பழனி உண்டியலில் தவறி விழுந்த தங்க செயின்.. அறங்காவலர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

🎬 Watch Now: Feature Video

thumbnail

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து பழனி முருகனைத் தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே சென்றுள்ளார். வெளியே செல்லும் வழியில் உள்ள உண்டியலில் சுவாமி மீது கொண்ட பக்தி பரவசத்தின் மிகுதியால் கழுத்திலிருந்த துளசி மாலையைக் கழற்றி உண்டியல் செலுத்த முற்பட்டுள்ளார்.

அப்போது துளசி மாலையுடன் சேர்த்து சுமார் 1 3/4 பவுன் தங்கச் செயினையும் தவறுதலாக உண்டியலில் செலுத்தி விட்டார். இது குறித்து கேரள பக்தரான சங்கீதா கோயில் நிர்வாகத்திடம் தான் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தங்கள் குடும்பத்தின் ஏழ்மை சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தவறுதலாக உண்டியல் செலுத்தப்பட்ட தங்க சங்கிலியைத் திரும்ப வழங்குமாறு கடிதம் கொடுத்துள்ளார்.

அதன் பின் இந்த நிகழ்வு உண்மை தானா என்று ஆராயும் நோக்கில் கோயில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. ஆனால் 1975 சட்டப்படி உண்டியலில் விழுந்த பொருட்கள் திரும்ப வழங்குவதற்கான வழிவகை எதுவும் இல்லை. ஆகவே கேரள பக்தரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கோயிலின் அறங்காவலர் குழுவின் தலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் 1 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17 புள்ளி 460 கிராம் எடையில் ஒரு தங்கச் செயினை சங்கீதாவிடம் வழங்கி உள்ளார்.

செயினை சங்கீதா குடும்பத்தினர் திருக்கோயில் தலைமை அலுவலகம் வந்து பெற்றுக் கொண்டனர். ஏழைக் குடும்பத்தின் நிலை அறிந்து கோயில் அறங்காவலர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கொடைக்கானலின் அழகை தொலைநோக்கி மூலம் கண்டு ரசித்த சுற்றுலாத்துறை அமைச்சர்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.