மேலக்காவேரி வராஹி அம்மன்.. 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை! - மேலக்காவேரி வராஹி அம்மன்
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பெருபாண்டி பகுதியில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவக் கோயிலான மங்களாம்பிகை சமேத நஞ்சுண்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வராஹி அம்மன் நின்ற கோலத்தில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் செய்து முடிக்கப் பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலில், ஆனி மாத அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில் வராஹி அம்மனை போற்றிடும் வகையிலான ஆஷாட நவராத்திரி விழா, கடந்த 19ஆம் தேதி முதல் வருகிற 28ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதனையொட்டி நாள்தோறும் மாலை நேரத்தில் வராஹி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியப்பொடி, அரிசி மாபவு பொடி, மஞ்சள் பொடி, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பலவிதமான வாசனை திரவியப் பொருட்களைக் கொண்டு விசேஷ அபிஷேகம் செய்து, புதிய பட்டு வஸ்திரங்கள் சாற்றி, மலர் மாலைகள் சூட்டி அலங்காரம் செய்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
மேலும், விழாவின் 4ஆம் நாள் பஞ்சமி திதியை முன்னிட்டு நேற்று இரவு வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்த பிறகு, 108 பெண்கள் பங்கேற்ற சிறப்பு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. செந்தில் சிவாச்சாரியார் மந்திரங்கள் கூற, அதற்கு ஏற்ப விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் வாழை இலை குத்துவிளக்கேற்றி வைத்து, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், வளையல், மஞ்சள் கிழங்கு, தாலிக்கயிறு, குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் வைத்து உதிரி மலர்கள், குங்குமம் கொண்டும் விளக்கிற்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.