மதுரை: மதுரையில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் காற்று அதிகம் வீசியதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்த நிலையிலும், பறக்கும் பலூன் கூடையில் நின்று மிக ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது, பருவநிலையைப் பொறுத்துதான் பறக்கும் பலூனை இயக்க முடியும், இதுகுறித்து பொதுமக்களுக்கு புரிதல் இல்லை என பெல்ஜியத்தைச் சேர்ந்த பலூன் வல்லுநர் அடேநேர்ட் கோன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் 10-ஆவது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா - ஜனவரி 2025 சார்பாக சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்றது. கடந்த ஜனவரி 10-12 சென்னையிலும், 14-16 பொள்ளாச்சியிலும் நடந்த நிலையில் ஜனவரி 19-20ஆம் தேதி மதுரையிலும் நடைபெறுகிறது.
பலூன் திருவிழாவில் பறக்காத பலூன்:
இத்திருவிழா மதுரை மாநகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள கீழக்கரை கிராமத்தில் நடைபெற்றாலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாலை 5 மணியளவில் பலூன் திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பறக்கும் பலூன் வல்லுநர்கள் தங்களது பலூன்களை ஏற்றிக் கொண்டு மினி லாரிகளில் வந்திறங்கினர்.
காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தபோதும், பலூன்களுக்குள் வெப்பக்காற்றை நிரப்பி பொதுமக்களுக்கு பலூன்களின் பிரம்மாண்டத்தைக் காட்சிப்படுத்தினர். பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தோடு அவற்றைக் கண்டுகளித்தனர். ஆனாலும், பலூன்கள் பறக்கவில்லை என்பது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
காற்றின் இயல்பு மிக முக்கியம்:
இதுகுறித்து, பெல்ஜியத்தைச் சேர்ந்த பறக்கும் பலூன் வல்லுநர் அடேநேர்ட் கோன் கூறுகையில், "தமிழ்நாட்டிற்கு 2-ஆவது முறையாக வருகை தந்துள்ளேன். இந்தியாவை மிகவும் நேசிக்கிறோம். இங்குள்ள மக்கள் மற்றும் உணவு முறை எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பலூன் திருவிழாவின் பொருட்டு வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஜனவரி 14 மற்றும் 15ஆம் தேதிகளில் பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடைபெற்றது. அங்கு பலூன் பறந்ததும், தரையிறங்கியதும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தற்போது மதுரைக்கு வருகை தந்துள்ளோம். தென்இந்தியப் பகுதியில் புயல் உருவாகியிருக்கின்ற காரணத்தால் இங்கு காற்று மிக வேகமான வீசுகிறது. காலையிலும், மாலையிலும் இங்குள்ள காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. எப்போதும், பறக்கும் பலூனைப் பொறுத்தவரை காற்றின் இயல்பு மிக முக்கியம். இந்த பலூன் திருவிழாவிற்காகவே நாங்கள் பெல்ஜியத்திலிருந்து இந்தியா வந்துள்ளோம். ஆனாலும், எங்கள் அனைவரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.
பறக்கும் பலூன் குறித்த புரிதல் தேவை:
அதனால்தான் மோசமான காற்று வீசும் சூழ்நிலையில் நாங்கள் பலூனை இயக்குவதில்லை. ஆனாலும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டோம். அப்போதும் இயலவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை பறக்கும் பலூன் குறித்து பொதுமக்களுக்கு புரிதல் இல்லை. அது இயங்கும் விதம் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. ஐரோப்பிய நாடுகளில் பறக்கும் பலூன் என்பது பொதுவான பொழுதுபோக்கு நடைமுறைகளில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பெல்ஜியத்தில் 250க்கும் மேற்பட்ட பலூன் கிளப் உள்ளது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பலூன் திருவிழா! 2-வது முறையாக வயலில் விழுந்த பலூன்கள்!
இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலும் பறக்கும் பலூன் செயல்பாடு பொதுவான பொழுதுபோக்கு நடைமுறைகளில் ஒன்றாக மாறும். இன்று இங்கு வருகை தந்த மக்களுக்கு பலூன் பறக்காதது ஏமாற்றம் அளித்துள்ளது என்பது வேதனை அளிக்கிறது. பருவநிலைதான் பலூன் பறப்பதற்கு ஏதுவானது என்பது இவர்களுக்குப் புரியவில்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அடுத்த முறை அதற்கான வாய்ப்பு உருவாகும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மதுரை கேகே நகரைச் சேர்ந்த காயத்ரி, "மதுரையிலிருந்து பலூன் திருவிழாவிற்காக நாங்கள் வந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்து வந்ததுபோல் பலூன் பறக்காதது ஏமாற்றமளிக்கிறது. காற்றின் கடுமை காரணமாக பலூன் பறக்கவில்லை என்கின்றனர். வெப்பக்காற்றை நிரப்பி எழுந்த பலூன் முன்பாகவும், பலூன் பேஸ்கெட் உள்ளேயும் சென்று நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்" என்றார்.