தென்காசியில் தீ விபத்தால் 100 டன் தென்னை நார் நாசம் - மின் கசிவு
🎬 Watch Now: Feature Video
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூரில் ராஜா முகமது என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 7) இரவு திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 100 டன் தென்னை நார் எரிந்து சாம்பலானது.
இந்த ஆலையில் சுமார் 100 டன் எடையுள்ள தென்னை நார்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன மற்றும் நார் தயாரிக்கப் பயன்படும் நவீன இயந்திரங்களும் பொருத்தப்பட்டிருந்தன. கடந்த சில ஆண்டுகளாகவே தென்னை நாருக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதால், இந்த தென்னங்கூந்தல்கள் நாராக தயாரிக்கப்படாமல் அப்படியே சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு இந்த ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் நிலைய தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும், காற்றின் வேகம் காரணமாக தொடர்ந்து தீ பரவி வருகிறது.
இதனால் தீயை அணைக்கும் பணி பெரும் சவாலாக உள்ளது. மேலும், இந்த விபத்தில் நார் தயாரிக்கப் பயன்படும் நவீன இயந்திரங்களும் தீயில் சிக்கி நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து அச்சன்புதூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.