லாஸ் ஏஞ்செல்ஸ்: வாகனங்கள், வணிக நிறுவனங்களின் கட்டடங்கள், அபார்ட்மெண்ட்கள், வீடுகள் உள்ளிட்ட 12,000 கட்டமைப்புகள் லாஸ் ஏஞ்செல்ஸ் காட்டுத்தீயில் தீக்கிரையாகி உள்ளன. இந்த பேரழிவில் இருந்து மீண்டு வருவது, மறு கட்டமைப்பு என்பது மிகவும் பெரிய சவால்களைக் கொண்டதாகும்.
தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகளில் தங்கள் வீடுகள் தீப்பற்றி எரிவதை அதிர்ச்சியுடன் பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். லாஸ் ஏஞ்செல்ஸ் நகரைச் சுற்றி பரவிய காட்டுத் தீ பாதிப்பை ஏற்படுத்திய இடங்களில் இன்னும் புகைந்து கொண்டிருக்கும் பகுதியில் தங்கள் வீடுகளில் இன்னும் ஏதேனும் மிச்சம் இருக்கிறதா என்றும் பலர் தேடுகின்றனர். மீண்டும் தீ பிடிக்கலாம் என்ற எச்சரிக்கைக்கு இடையே, அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் பாதிப்பில் இருந்து மீளவில்லை.
மறு கட்டமைப்பு: சிலருக்கு முதலில் இதனை பார்க்கும்போது இந்த பிராந்தியத்தில் வசித்த 13 மில்லியன் மக்களின் பிடிமானங்கள் இழந்து விட்டன என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை என்பதும், அதில் இருந்து மீண்டு வருவது, மீண்டும் மறு கட்டமைப்பது என்பது பெரும் சவால்களைக் கொண்டதாகவும் இருக்கும். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக இந்த பகுதியில் மழையே பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி லேசான காற்று காரணமாக இந்த பகுதியில் பரவிக்கொண்டிருந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
![ஈட்டன் தீ விபத்துக்குப் பிறகு, வீட்டு உரிமையாளர்களான சோஹ்ராப் நஃபிசி (இடது) மற்றும் கிறிஸ்டின் மெய்ண்டர்ஸ் தங்களின் தீக்கிரையான வீட்டை சோகத்துடன் காண்கின்றனர்.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-01-2025/lafire2_1101newsroom_1736596961_1089.jpg)
பாலிசேட்ஸ் கிழக்கு பகுதியில் தீ பரவும் என்பதால் 10ஆம் தேதி மாலை அந்தப்பகுதியில் வசித்தவர்களை வெளியேறும்படி தீயணைப்பு துறையினர் கூறியிருந்தனர். அலுவலகத்தில் இருந்த போது அல்டடேனா பகுதியில் உள்ள தமது வீடு தீப்பற்றி எரிவதை பிரிட்ஜெட் பெர்க், தொலைகாட்சியில் பார்த்தார். இதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி மேலிட்டது. 16 ஆண்டாக அவர் வசித்து வந்த வீடு தீகிரையாகி சில மரக்கட்டைகளே மீதம் இருந்தன.
அவருடைய குழந்தைகள் தீக்கிரையான வீட்டை சுற்றி வந்தனர். ஒரு சிறிய மன்பாணை, சில நினைவுப் பொருட்களையும் கண்டுபிடித்தனர்.குழந்தைகளின் தந்தை தீக்கிரையான வீட்டில் இருந்து அவரது பாட்டி தமக்கு கொடுத்திருந்த ஒரு பொருளை கண்டுபிடித்து எடுத்தார். "இன்று நான் மட்டும் வீடுகளை இழக்கவில்லை. இங்கு வசித்த ஒவ்வொருவரின் வீடும் தீக்கிரையாகி உள்ளது,"என பிரிட்ஜெட் பெர்க் கூறினார்.
![ஈடன் பகுதியில் தீக்கிரையான வீடுகளுக்கு மத்தியில் ஏதேனும் மிச்சம் இருக்கிறதா என தேடும் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள்.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-01-2025/lafire3_1101newsroom_1736596961_399.jpg)
நிர்வாக தோல்வி: லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் வடக்கு பகுதியில் அதிக அடர்த்தியில் மக்கள் வசிக்கும் 40 கி.மீ சுற்றளவில் முதன் முதலில் தீ பற்றியது. இந்த தீவிபத்தில் 12000த்துக்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் தீக்கிரையாகி உள்ன. வீடுகள், அபார்ட்மெண்ட் கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், வாகனங்கள் தீகிரையாகி உள்ளன. எனினும் தீவிபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
தலைமை பதவி உள்ளவர்களின் தோல்வி என்றும், அரசியல் குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன. செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் கேவின் நியூசம், இந்த பகுதியில் உள்ள 440 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட அணையில் தண்ணீர் இல்லாமல் போனதற்கு காரணம் என்று விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் தீயணைப்புத்துறை தலைவர் கிறிஸ்டின் க்ரௌலி," தீயணைக்கும் பணிக்கான போதுமான நிதியை ஒதுக்கவில்லை. துறையின் தலைமையின் தோல்வியே இதற்கு காரணம். அதே போல தீயணைக்க போதுமான தண்ணீரும் கிடைக்கவில்லை," என்றார்.
![ஈடன் பகுதியில் ஒரு வாகன டீலர் ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் தீக்கிரையாகின](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-01-2025/lafire4_1101newsroom_1736596961_165.jpg)
இந்த தீ விபத்தில் பாலிசேட்ஸ் பகுதியை சேர்ந்த 5 பேர், ஈட்டன் பகுதியை சேர்ந்த 6 பேர் என 11 பேர் உயிரிழந்துள்ளனர். தீக்கிரையான பகுதிகளில் உடல்கள் கிடக்கின்றனவா என்று அறிய நாய்களை அனுப்பி தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எனவே உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிகிறது.
வால்ட் டிஸ்னி உதவி: இந்த பெரிய காட்டுத் தீயில் 145 சதுர கி.மீ பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன. உணவகங்களில் சர்வராக வேலை பார்ப்பவரின் வீடு முதல் பெரிய பாலிவுட் நடிகருக்கு சொந்தமான வீடு வரை எதுவும் இந்த காட்டுத்தீக்கு தப்பவில்லை. காட்டு தீ விபத்தின் சேதம் குறித்து இன்னும் அரசு எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தனியார் அபைப்புகளின் ஆய்வில் பில்லியன் கணக்கிலான டாலர் மதிப்புள்ள பொருட்கள் எரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, வால்ட் டிஸ்னி நிறுவனம், தீ விபத்து நிவாரணத் தொகையாக 15 மில்லியன் டாலர் தருவதாக அறிவித்துள்ளது.
![பாலிசேட்ஸ் பகுதியில் தீக்கிரையான வீடுகளுக்கு மத்தியில் சாலையில் நடந்து செல்லும் நபர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-01-2025/lafire5_1101newsroom_1736596961_216.jpg)
இந்த தீ விபத்தில் பள்ளிகள், தேவாலையங்கள், தொழுகைக் கூடம், நூலகங்கள், சிறிய துணிக்கடைகள், பார்கள், உணவகங்கள், வங்கிகள், அந்தப் பகுதியின் அடையாளங்களாக கருதப்படும் முக்கியமான கடடமைப்புகளும் தீக்கிரையாகி உள்ளன. குறிப்பாக 1887 ஆம் ஆண்டுக்கு முந்தைய அல்தடேனாவில் உள்ள ஒரு ராணி அன்னே பாணி மாளிகையும் தீக்கிரையாகி உள்ளது.
பசிபிக் பாலிசேட்ஸ் கடற்கரையை ஒட்டிய பகுதியில் கடந்த 31 ஆண்டுகளாக வசித்து வந்த கிரெக் பெண்டன் என்பவரின் வீடு தீக்கிரையாகி விட்டது. தீக்கிரையான வீட்டில் அவரது கொள்ளு பாட்டியின் திருமணம் மோதிரம் கிடக்கிறதா என்று சோகத்துடன் தேடிப்பார்த்து கொண்டிருந்தார்.
வேதனையிலும் நம்பிக்கை: "கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று காலை இங்கு இருந்தோம். நாங்கள் நின்றிருந்த வீட்டின் பகுதி எல்லாம் தீக்கிரையாகி விட்டது," என்றார். நகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வரும் சூழலை கண்டறிந்து வருகின்றனர். குறிப்பாக அட்டைப்பெட்டிகள் உள்ளிவற்றை சேகரித்து தங்கள் இடத்தில் தற்காலிக வீடுகளை அமைக்க முயன்று வருகின்றனர்.
![பாலிசேட்ஸ் தீ விபத்தில் தமது தந்தையின் வீடு தீக்கிரையான இடத்தில் பொருட்கள் மிச்சம் இருக்கிறதா என தேடும் இளைஞர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-01-2025/lafire6_1101newsroom_1736596961_124.jpg)
இதனிடையே, பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை இழந்த அன்னா யேகர், தமது கணவர், 6 வயது மகள், 3 வயது மகன், இரண்டு நாய்கள், சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு காட்டுத் தீயில் இருந்து தப்பி சென்றனர். மீண்டும் அந்த வீட்டுக்கு எப்படி செல்வது என்று வேதனை தெரிவித்துள்ளார். குழந்தைகள் வரைந்த சித்திரங்கள், கணவரின் சமையல் புத்தகங்கள், குடும்ப புகைப்படங்கள், தாயிடம் இருந்து பெற்ற நகைகள் ஆகிய அனைத்தும் தீக்கிரையானதால் அன்னா யேகர் வேதனையில் உள்ளார்.
அன்னா யேகர் வீட்டின் முன் தாழ்வாரப் பகுதி மட்டும் தீகிரையில் இருந்து தப்பி இருக்கிறது. "இந்த முன் தாழ்வாரம் எனக்காகவே இங்கு இருக்கிறது. எனவே இதனை மறு கட்டமைக்க வேண்டும். இங்கிருந்து வெளியேறக் கூடாது என்ற நம்பிக்கையை அது அளிக்கிறது என்றார். 'ஏய், நான் இன்னும் இங்கேயே இருக்கிறேன். நீயும் இங்கேயே இருக்கலாம்' என்று அது என்னிடம் பேசுவது போல உள்ளது என்றார்.