சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடை தேர்தலில் போட்டியா ? புறக்கணிப்பா? என்பது குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்கு பிறகு அறிக்கை வெளியிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடை தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
80 சதவீத அறிவிப்புகள் மிச்சம்
இந்நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி கூறுகையில், '' 2021 ஆம் ஆண்டு தேர்தலின் பொழுது திமுக சார்பாக அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்புகளில் சுமார் 20 சதவீத அறிவிப்புகள் தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, இன்னும் 80 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின், உதயநிதி இருவரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். நேற்றைய தினம் சட்டமன்றத்தில் பேசும்பொழுது, எப்பொழுது நீட் தேர்வு ரத்து செய்வீர்கள், திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டு காலம் நிறைவு பெற்றுவிட்டது, ஓராண்டு தான் இருக்கிறது. எப்போது நீட் தேர்வை ரத்து செய்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு,
எங்களிடம் ஒன்றும் கிடையாது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது, மத்திய அரசுதான் ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் கையை விரித்து விட்டார்.
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது மத்திய அரசு தலையிட்டால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று நாங்கள் அப்போது சொல்லும் பொழுது, எங்களை முதல்வர் ஏளனமாக பேசினார். ஆனால், நேற்றைய தினம் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று முதல்வர் அறிவித்திருக்கிறார், இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.
விலைவாசி உயர்வு
2021 ஆம் ஆண்டு அரிசி விலை 35 ரூபாயாக இருந்தது. 45 ரூபாய் வரைக்கும் அரிசிகள் விற்பனை செய்யப்பட்டன. இன்றைய தினம் 75 ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்றவாறு விலை உயர்ந்துள்ளது. பருப்பு, பூண்டு விலை உயர்ந்திருக்கிறது. இதற்கு முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கண்டமான பேருந்தை தான் வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார். போக்குவரத்து துறையில் இருக்கின்ற பணியாளர்களுக்கு இதுவரை பண பலன் வழங்கவில்லை. ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டு வருகின்றனர், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அறிவித்தார்கள், இது எவற்றையும் நிறைவேற்றவில்லை.
லிப்ஸ்டிக் அடித்த பேருந்து
பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவித்தார்கள். வெற்றி பெற்ற பிறகு அந்தர் பல்டி அடித்துவிட்டனர். பஸ்ஸின் முன்பும் பின்பும் லிப்ஸ்டிக் அடித்து, அந்தப் பேருந்தில் மகளிர் ஏறினால் தான் கட்டணம் இலவசம் என்று அறிவித்தார்கள். இதுதான் திமுக அரசின் சாதனை.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை கடனை வாங்கிதான் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். இப்படியே கடன் வாங்கிக் கொண்டிருந்தால் எப்போதுதான் அந்த கடனை திருப்பிக் கொடுப்பார்கள்? தமிழக அரசின் வருமானத்தை அதிகரித்து ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை. கடன் வாங்கி ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.
சீமான் பெரியார் பற்றி பேசியது வருத்தத்திற்குரியது. மறைந்த தலைவர் பற்றி தரக்குறைவாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது'' என இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.