ETV Bharat / city

இலங்கைக்கு எதிராக நிலைப்பாடு எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல் - ராஜபக்சே

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், ஈழத்தமிழர்களுக்குப் போதிய அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ramadoss
ramadoss
author img

By

Published : Sep 28, 2020, 2:23 PM IST

சென்னை: இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், ஈழத்தமிழர்களுக்கு போதிய அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியா - இலங்கை இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இரு நாடுகளின் பிரதமர்களும் கடந்த 26 ஆம் தேதி இணைய வழியில் பேச்சு நடத்தினார்கள். அப்போது, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 13 ஆவது திருத்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளித்தல், போருக்குப் பிந்தைய சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை ஆகியவற்றுடன் வாழ வகை செய்ய வேண்டும் என்று ராஜபக்சேவை மோடி கேட்டுக் கொண்டார்.

அதையேற்ற ராஜபக்சே, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகளை முழுமையாக தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற தமது அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்திருந்தார். மோடியுடனான பேச்சுகளின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயத்தை இலங்கை அரசு அதன் அறிக்கையில் தவிர்த்திருப்பதன் மூலம், இந்தியாவை அவமானப்படுத்தியிருக்கிறது.

போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சே, அதற்கு எதிராக உலக அரங்கில் எழுந்த கண்டனத்திற்குப் பணிந்து, 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட கூடுதல் அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்கத் தயார் என்று அறிவித்தார். ஆனால், இப்போது 13 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவது குறித்து உறுதி அளிக்க மறுத்திருக்கிறார்.

இலங்கை அரசியலமைப்பு சட்டத்திலிருந்து 13 ஆவது திருத்தம் நீக்கப்படும் என்ற அச்சம் ஈழத்தமிழர்களிடம் எழுந்துள்ள நிலையில், அதை நீக்குவதற்கான உறுதிமொழி கூட அளிக்கப்படவில்லை என்பதிலிருந்தே இந்தியாவை இலங்கை எந்தளவுக்கு மதிக்கிறது என்பதை உணரலாம். இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், ஈழத்தமிழர்களுக்குப் போதிய அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

பன்னாட்டு அமைப்புகளில் இது குறித்த விவாதங்களும், விசாரணைகளும் வரும் போது, இலங்கைக்கு எதிரான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். அதன்பிறகும் இலங்கையின் போக்கு மாறாவிட்டால், இறுதித் தீர்வாக ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் தனித்தமிழீழம் அமைக்க உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கு.க.செல்வத்தின் வழக்கை வேறு நீதிபதிக்கு பட்டியலிட பரிந்துரை

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.