குற்றப் பின்னணி கொண்ட எம்எல்ஏக்கள், எம்பிக்களின் பதவியைப் பறிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் எஸ்.என். சுக்லா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்துள்ளார்.
அந்த மனுவில், "நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் (அரசியல்வாதிகள் உள்ளிட்டோர்) மீது நான்காயிரத்து 127 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசியல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் வழக்குகளை குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் விசாரிக்க நீதிமன்றங்கள் முன்வர வேண்டும்.
ஆனால், தற்போது விசாரணையின் காலஅளவை ஆண்டுக் கணக்கில் நீட்டிக்கும் நிலையே உள்ளது. இதுபோன்று குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள், தேர்தல் தொடர்பான வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரிப்பதற்கென சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.
மேலும், குற்றப் பின்னணி உள்ளவா்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது.
அத்துடன், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றப் பின்னணிக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெற்றிபெற்ற தேர்தல்களை மதிப்பிழப்பு செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும். அந்த தொகுதிகளை உறுப்பினரற்றவையாக அறிவிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமா்வு முன் இன்று நடைபெற்றது.
இந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், இவை அனைத்தும் சட்டமியற்றும் பிரச்னைகள் சார்ந்த நாடாளுமன்றத்தின் களத்திற்குள் வருவதால் இந்த விவகாரத்தில் எந்தவொரு உத்தரவையும் நாங்கள் வழங்கிட முடியாதெனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.