டெல்லி : பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் அமரீந்தர் சிங். இவர் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சி மேலிடம் கொடுத்த நெருக்கடி காரணமாக பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
இவருக்கும் மாநில கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங்குக்கும் இடையே ஏற்கனவே பனிப்போர் நீடித்துவந்தது. இதுவும் கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமாவுக்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டது.
அமரீந்தர் சிங்- சித்து மோதல்
இதற்கிடையில் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி சில நாள்களுக்கு முன்பு பதவியேற்றார். அவரின் புதிய அமைச்சரவையில் கேப்டன் அமரீந்தர் சிங் ஆதரவாளர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நவ்ஜோத் சிங் சித்துவின் சில கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. இதற்கிடையில் நவ்ஜோத் சிங் சித்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.
பஞ்சாப் அரசியலில் பரபரப்பு
இதையடுத்து ட்விட்டரில் தாக்குதல் தொடுத்த கேப்டன் அமரீந்தர் சிங், “நான் ஏற்கனவே கூறினேன், அவர் நிலையான மனிதர் கிடையாது. பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்தை அவரால் நிர்வகிக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சலசலப்பு அடங்குவதற்குள் கேப்டன் அமரீந்தர் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார். இது பஞ்சாப் அரசியலில் பெரும் பரரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு நோ
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக கூறிய கேப்டன் அமரீந்தர் சிங், தமக்கு பாஜகவில் இணையும் திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிய பின்பு, கேப்டன் அமரீந்தர் சிங் வியாழக்கிழமை (செப்.30) தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அதில், “நான் ஒரு காங்கிரஸ்காரன். ஆனால் காங்கிரஸில் இருக்க விருப்பமில்லை. நான் அங்கு சரியான முறையில் நடத்தப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : டெல்லியில் அமித் ஷா, அமரீந்தர் சிங் சந்திப்பு!