கோவையில் 50 பவுன் தங்க நாணயங்களை திருடிய நகைக்கடை ஊழியர் சிக்கியது எப்படி? - வைரலாகும் வீடியோ - Gold Coin Theft - GOLD COIN THEFT
🎬 Watch Now: Feature Video
Published : Apr 28, 2024, 1:07 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாநகரில் நகைக்கடையில் 50 பவுன் மதிப்புள்ள 122 தங்க நாணயங்களை திருடிச் சென்ற ஊழியரை, ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் வெங்கடாசலம் சாலையில், புதிதாக நகைக்கடை திறந்து நடத்தி வருகின்றனர். அந்த கடையில் மேலாளராக பிச்சாண்டி மற்றும் உதவியாளராக முத்துகுமார் ஆகிய இருவர் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி கடையில் ஆடிட்டிங் வேலை இருப்பதாக கூறி, மேலாளர் முத்துகுமாரிடம் சாவியைக் கொடுத்து நகைக்கடையை சுத்தப்படுத்தும்படி கூறியுள்ளார். இதற்காக நகைக்கடையின் சாவியை வாங்கிச்சென்ற முத்துகுமார், கடை உரிமையாளரின் அறையின் பூட்டை திறந்து, உள்ளே லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சத்து 79 ஆயிரம் மதிப்புள்ள 394 கிராம் எடையுள்ள (50 பவுன்), 122 தங்க நாணயங்களை திருடியுள்ளார். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையறிந்த மேலாளர், ஆர்.எஸ்.புரம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் வைத்து முத்துக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடமிருந்து 122 தங்க நாணயங்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது முத்துக்குமார் தங்க நாணயங்களை எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.