தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் சிக்கி அறுந்து விழுந்த மின்சார கம்பி.. துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு! - Chennai Bengaluru Highway
🎬 Watch Now: Feature Video
Published : Mar 2, 2024, 9:42 AM IST
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களில் மின்சாரத்துறை சார்பில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அதிக உயரத்தில் மின்சாரம் கம்பிகள் செல்கின்றன. இந்த நிலையில் பெங்களூரிலிருந்து அதிக அளவு, தொழிற்சாலைக்குத் தேவையான இயந்திரப் பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் சென்ற லாரி ஒன்று, சோலூர் பகுதி சாலையின் நடுவே சென்ற மின்சாரக் கம்பியில் சிக்கியுள்ளது.
அப்போது, மின்சாரக் கம்பம் உடைந்து சாலையில் விழுந்ததால், மின்சாரக் கம்பிகளும் அறுந்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்துள்ளது. அதையடுத்து உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததால், விரைந்து வந்த மின்சாரத்துறையினர் சோலூர் பகுதி மின் இணைப்பு துண்டித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் உடைந்த மின்கம்பம் மற்றும் சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பம் மற்றும் கம்பிகளை அப்புறப்படுத்தி, மீண்டும் மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்பொழுதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே மின்சாரக் கம்பி அறுந்து விழுந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.