விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவலாக மழை! - RAIN IN VILLUPURAM
🎬 Watch Now: Feature Video
Published : May 8, 2024, 11:33 AM IST
விழுப்புரம்: தமிழ்நாட்டில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் வீசிய வெப்ப அலையால், மக்கள் அதிகளவு சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் வெயில் பரவலாகவே சதம் அடித்து வந்தது.
இந்த நிலையில், வெப்பத்தைத் தணிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது.
விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோலியனூர், வளவனூர், முண்டியம்பாக்கம், ஜானகிபுரம், அரசூர் என பரவலாகக் கனமழை பெய்தது. இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்தது. திடீர் பெய்த கனமழை காரணமாகக் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், திண்டிவனம் - ரெட்டணை (இரட்டணை) மார்க்கத்தில் 16c என்ற அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தின் மேற்கூரை பகுதிகளில் ஆங்காங்கே ஓட்டைகளாக இருப்பதால் பேருந்துக்குள் மழை நீர் புகுந்ததால் பயணிகள் தவித்தனர். மேலும், மழைக்காலம் வருவதற்கு முன்பு பேருந்தைச் சீரமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரைச் சுற்றி சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.