வலையில் சிக்கிய கடல் 'விண்ணி'.. மீண்டும் கடலிலேயே விட்ட மீனவர்கள்!
🎬 Watch Now: Feature Video
Published : 2 hours ago
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் சவேரியா என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, மீனவர்கள் மீன்களைப் பிடிக்க வலையை விரித்து மேலே இழுத்தபோது, அவர்களால் இழுக்க முடியாத அளவுக்கு அதிக எடை இருந்துள்ளது.
தொடர்ந்து, மீனவர்கள் வலையை இழுத்ததில் சுமார் 40 கிலோ எடை கொண்ட 1.5 மீட்டர் நீளம் கொண்ட விண்ணி (விண்ணிக்குட்டி) என்னும் அரிய வகை கடல் பாலூட்டி வலையில் சிக்கியது தெரிய வந்துள்ளது. அதைக் கண்ட மீனவர்கள், இதுகுறித்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வனத்துறை உயரதிகாரிகள் இது அரிய வகை கடல் பாலூட்டியான விண்ணி என்பதை உறுதி செய்துள்ளனர். அதன் பின்னர் வனத்துறையினரின் அறிவுறுத்தலின்படி, அந்த விண்ணியை மீனவர்கள் கடலுக்குள் விட்டனர். ஏற்கனவே 2009ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் இறந்த நிலையில் ஒரு கடல் விண்ணி கரை ஒதுங்கியது. தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதேபோல் ஒரு கடல் விண்ணியை உயிருடன் பிடித்த நிலையில், மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களை வனத்துறையினர் பாராட்டியுள்ளனர்.