திருப்பத்தூர்: திருப்பத்தூர் பாச்சல் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலகலப்பு படப்பாணியில் 5 சால்வையை வைத்து மாறி மாறி 50 தூய்மை பணியாளர்களை கௌரவித்த ஊராட்சி நிர்வாகம் மீது அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சனிகிழமை (23ஆம் தேதி) காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டமானது நடத்தப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களை சிறப்பிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் கிராம சபை கூட்டமானது நடைபெற்றது. அந்த கிராம சபை கூட்டத்தில் ஊர்மக்கள் ஒரு சிலர் மற்றும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், என ஊராட்சிக்கு உட்பட்ட பணியாளர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்டது.
இதில் ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவுறுத்தியபடி தூய்மை பணியாளர்களை கௌரவம் செய்யும் வகையில் அவர்களுக்கு சால்வை போர்த்தி, பரிசு வழங்கப்பட்டது. அப்போது கலகலப்பு படபாணியில் சந்தானம் ஒரே சால்வையை வைத்து அனைவருக்கும் அணிவிப்பது போல், ஐந்து சால்வையை வைத்து 50 தூய்மை பணியாளர்களுக்கும் மாறி மாறி போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொடூர தாக்குதல்: கை முறிந்த நிலையில் இளைஞர் கைது!
மேலும் ஊராட்சி நிர்வாகம் வெறும் பேச்சுக்காக, பத்து நிமிடங்கள் இந்த கிராம சபை கூட்டத்தை முடித்துவிட்டதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் ஊராட்சி நிர்வாகம் மீது அரசு நடவடிக்கை எடுத்து, இது போன்ற அவலங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்