சென்னை: சாதி, மதம் என்று அந்நிய மொழிகள் மூலமாகப் பல்வேறு பண்பாட்டுத் தாக்குதல் நடந்தாலும், அனைத்தையும் தாங்கி, தமிழும், தமிழினமும், தமிழ்நாடும் நின்று நிலைக்கத் தமிழின் வலிமையும், நம்முடைய பண்பாட்டின் சிறப்பும் தான் காரணம். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும், கலைக்கும் உண்டு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம், இசை விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில், நேற்று - ஞாயிற்றுக்கிழமை (நவ.24) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தினராக கலந்துக் கொண்டு, ‘திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினத்தின் வாழ்க்கை சரிதம்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கியுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா ஆண்டு இசைவிழாவில் கலந்துகொண்டு,விருதுகளை வழங்கி சிறப்பித்தார். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/PJYZQETG5X
— TN DIPR (@TNDIPRNEWS) November 24, 2024
விருது பெற்ற கலைஞர்கள்:
வ.எண் | கலைஞர்கள் | விருதுகள் |
1 | நடிகர் சத்யராஜ் | கலைஞர் விருது |
2 | திருப்பாம்புரம் டி.கே.எஸ். மீனாட்சி சுந்தரம் | ராஜரத்னா விருது |
3 | ஆண்டாள் பிரியதர்ஷினி | இயல் செல்வம் விருது |
4 | முனைவர் காயத்ரி கிரீஷ் | இசைச் செல்வம் விருது |
5 | திருக்கடையூர் டி.எஸ்.எம் உமாசங்கர் | நாதஸ்வரச் செல்வம் விருது |
6 | சுவாமிமலை சி.குருநாதன் | தவில் செல்வம் விருது |
7 | முனைவர் தி.சோமசுந்தரம் | கிராமியக் கலைச் செல்வம் விருது |
8 | பார்வதி ரவி கண்டசாலா | நாட்டியச் செல்வம் விருது |
பின்னர், விருது பெற்ற நடிகர் சத்யராஜ் பேசுகையில், “நான் வாங்கிய ஒவ்வொரு விருதும் கலைஞர் கையில் தான். தற்போது முதல் முறையாக கலைஞர் பெயரில், முதலமைச்சர் கையில் இருந்து பெற்றுள்ளேன். பிற மாநிலங்களில் தலைநகரம் தான் அழகாக இருக்கும், ஆனால், உட்புறம் அதன் நிலை வேறுபடும். ஆனால் தமிழ்நாடு எங்கும் பார்த்தாலும் ஒரே மாறி இருக்கும். நாம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொன்விழா காணும் முத்தமிழ்ப் பேரவை சார்பில் கலைச்செல்வங்களுக்கு விருதுகள் வழங்கினேன்.
— M.K.Stalin (@mkstalin) November 24, 2024
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் வழியில், இசையிலும் தமிழ் ஆள வேண்டும். மொழியையும் கலையையும் கண்போல் காப்போம்! pic.twitter.com/klLQEfnUDJ
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிய போது, “முத்தமிழ்ப் பேரவை தொடங்கிய காலத்தில் இருந்து கலைஞர் ஆண்டுதோறும் தன்னுடைய கரங்களால் விருதுகளை கலைஞர்களுக்கு வழங்கிச் சிறப்பிப்பதை தனது கடமையாக கருதி அதை செயலாற்றி வந்தார். அவருடைய வழியில் நானும் இன்றைக்கு அந்தக் கடமையை ஆற்றுகிறேன். கலைஞரை ஏன் முத்தமிழறிஞர் என்று போற்றுகிறோம் என்றால், பேச்சாற்றல், எழுத்தாற்றல் என்று இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழிலும் தன்னுடைய தமிழாற்றலால் முத்திரை பதித்தவர்.
இதையும் படிங்க: "நாளை நமதே இந்த நாடும் நமதே" - ஜானகி நூற்றாண்டு விழாவில் தோன்றி பேசிய எம்.ஜி.ஆர்!
ஆண்டுதோறும் பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகள் கொடுக்கிறீர்கள். அவரால் உருவாக்கப்பட்ட இந்த முத்தமிழ் பேரவையின் சார்பில் கருணாநிதி பெயரில் வரும் ஆண்டில் இருந்து ஒரு விருது வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நடந்த விழாவில் கட்டளை பிறப்பித்தேன். இந்த ஆண்டு அதனை பேரவையின் செயலர் அமிர்தம் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு கருணாநிதி விருது நடிகர் சத்யராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏனென்றால், மிக மிக தகுதி வாய்ந்தவருக்கு அந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. கலையுலகத்தில் இருந்து கொண்டே தன்னுடைய பகுத்தறிவு உணர்வையும், சுயமரியாதை எண்ணத்தையும், திராவிடக் கொள்கைகளையும் மறைக்காமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாகப் பேசக்கூடியவர் சத்யராஜ்.
மொழி/கலை: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நம்முடைய முழக்கம். அந்த வரிசையில் இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும். இடையில் சாதி, மதம் என்று அந்நிய மொழிகள் மூலமாகப் பல்வேறு பண்பாட்டுத் தாக்குதல் நடந்தாலும், அனைத்தையும் தாங்கி, தமிழும், தமிழினமும், தமிழ்நாடும் நின்று நிலைக்கத் தமிழின் வலிமையும், நம்முடைய பண்பாட்டின் சிறப்பும் தான் காரணம். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும், கலைக்கும் உண்டு. அந்த இரண்டையும் கண்போல் காக்க வேண்டும்.
அரை நூற்றாண்டு காலமாக தொய்வின்றி கலைப் பணியாற்றி வரும் முத்தமிழ்ப் பேரவையானது, ஐம்பதாம் ஆண்டு விழாவோடு நின்றுவிடாமல், நூற்றாண்டு விழாவையும் தொட வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தனது கலைப்பணியைத் தொடர வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்