பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோயில் திருவிழா; பூஜை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.20 ஆயிரத்திற்கு ஏலம்!
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: ஈரோடு மாவட்டம், விளக்கேத்தி அருகே உள்ள புது அண்ணா மலைப்பாளையத்தில் உள்ள பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழா 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல், இங்கு பூஜையில் வைக்கப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்படப்படுவது வழக்கம். அதேபோல, இந்தாண்டும் இக்கோயிலின் மகாசிவராத்திரி விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது.
3-வது நாளான நேற்று (மார்ச் 9) காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து, சாமிக்கு அபிஷேகம் செய்து, பழங்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து இரவு பத்து மணி அளவில் சாமி முன்பு பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை கனி மற்றும் வெள்ளி காசு, வெள்ளி மோதிரம் ஆகியவை ஏலம் விடப்பட்டன.
இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சை கனியை ஏலம் எடுத்தனர். இதில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த ரவி என்பவர் 20 ஆயிரம் ரூபாய்க்கு பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தார். இதேபோல, சாமியிடம் வைக்கப்பட்ட வெள்ளி மோதிரத்தை 14 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், வெள்ளி காசுகளை 15 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்தனர்.
இந்த கோயில் விழாவில் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் ஏலம் விடப்படும் பொருட்களை வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ வைத்தால் நல்லது நடக்கும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் மாசி மகா பிரதோஷம்; பெரிய நந்திக்கு சிறப்பு பூஜை