கரூர் : தென்காசி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் 45 வயதான நபர். இவருக்கு 42 வயதில் மனைவியும், 6 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் கடந்த ஏழு வருடங்களாக கரூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளனர். 45 வயதான இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஆறுமாத கர்ப்பிணியான தனது மனைவியை ரத்தப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கணவன் - மனைவி இருவரும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி, இருவரும் ரத்தப் பரிசோதனை செய்துள்ளனர். ரத்தப் பரிசோதனை முடிவானது கணவன்- மனைவி இருவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவன்- மனைவி இருவரது ரத்தத்திலும் எச்ஐவி நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் மணமுடைந்த இவர், இன்று( நவ 9) அதிகாலை தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு, தானும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் 4 நாட்களே பழக்கம்.. ட்ரிப்-க்கு சென்ற 16வயது சிறுமி பரிதாபமாக பலி!
அப்போது சத்தம் கேட்கவே, அருகில் இருந்தவர்கள் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். கதவை திறக்காததால், வெங்கமேடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து மயக்க நிலையில் இருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை முடிந்த பிறகு, மனைவி மற்றும் மகளை கொலை செய்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்