அம்ரேலி : பொதுவாக நம் வீட்டில் வளரும் செல்லப்பிராணிகள் மீது சிலர் அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்கள். அந்த பிராணிகள் திடீரென இறந்துவிட்டால் அதனை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. பின்னர் அதனை ஊர்வலமாக எடுத்துச்சென்று மரியாதையுடன் அடக்கம் செய்வர்.
இது போன்ற செய்திகள் பல முறை நாம் கேட்டு இருப்போம். ஆனால் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காருக்கு இறுதி சடங்கு செய்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டம், பதர்ஷிங்கா கிராமத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் போலாரா. இவர் கடந்த 2013-14ம் ஆண்டில் வேகன் ஆர் என்ற காரை வாங்கியுள்ளார். இந்த கார் வந்த பிறகுதான் தனக்கு நற்பெயர் கிடைத்ததாகவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், அவர் நம்புகிறார். இதனால் அவர் தனது காரை குடும்பத்தில் ஒருவர் போல் பாவித்து கவனித்து வந்தார்.
காருக்கு இறுதி சடங்கு : நீண்டகாலம் ஓடியதால் காரில் அவ்வப்போது பழுது ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் அவர் வேறு காரை வாங்கி இருக்கிறார். இருப்பினும், தன்னுடைய பழைய காரை விற்க சஞ்சய் போலாரா மனமில்லாமல் அதனை தனக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்துவிட முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து இறுதிச் சடங்கிற்கான தேதியையும் குறித்து சிறப்பு அழைப்பிதழ்களையும் தயாரித்துள்ளார்.
இதனை தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு கொடுத்து, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைப்பார்த்த உறவினர்கள் முதலில் ஆச்சரியம் அடைந்தனர். எனினும், சஞ்சய் போலாரா முடிவினை யாரும் எதிர்க்கவில்லை. அதேநேரம் வினோதமான அந்த நிகழ்வைக் காண வருகை தரவும் முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் இனி போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம்..! - சுப்ரீம் கோர்ட் கூறுவது என்ன..?
4 லட்சம் செலவு : இதன் பின்னர் சஞ்சய் போலாரா தனது வீட்டு முன்பு இருந்த ஷெட்டில் நின்ற பழைய காரை மலர் மாலைகளால் அலங்கரித்து, சற்று தொலைவில் உள்ள அவரது தோட்டத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றார். இந்த இறுதிச் சடங்கில் சுமார் 1,500 பேர் ஊர்வலமாக வந்தனர். காரை அடக்கம் செய்வதற்காக தோட்டத்தின் ஒரு பகுதியில் 15 அடி ஆழத்தில் குழி ஒன்று தோண்டப்பட்டு இருந்தது.
அந்த இடத்துக்கு ஊர்வலம் வந்ததும், காருக்கு பூசாரிகள் மந்திரங்களை ஓதினர். பின்னர் சஞ்சய் போலாரா மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த கார் மீது ரோஜா இதழ்களை தூவினர். இதையடுத்து கார் குழிக்குள் இறக்கப்பட்டு, மண்ணால் மூடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்தும் வழங்கப்பட்டது. காரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக சஞ்சய் போலாரா ரூ.4 லட்சம் வரை செலவு செய்துள்ளார் என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயமாகும்.
வித்தியாசமாக செய்ய வேண்டும் : இதுகுறித்து சஞ்சய் போலாரா கூறுகையில், ''இந்த கார் பல ஆண்டுகளாக எங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே இருந்தது. கார் வந்த பிறகுதான் எனக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டு சமுதாயத்தில் அந்தஸ்து கிடைத்தது. மேலும், தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. எனவே, அதனை எங்களது அதிர்ஷ்ட வாகனமாக கருதினோம்.
இந்த காரை விற்பனை செய்வதற்கு பதில் அதனை எங்களுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என சற்று வித்தியாசமாக முடிவு எடுத்தோம். பின்னர், எங்களது தோட்டத்தில் காரை சமாதியாக்கிவிட்டோம்'' என தெரிவித்தார்.