ஒகேனக்கல் நீர்வரத்து 50,000 கன அடியாக உயர்வு.. 4வது நாளாக தொடரும் தடை! - Dharmapuri Hogenakkal - DHARMAPURI HOGENAKKAL
🎬 Watch Now: Feature Video
Published : Jul 19, 2024, 4:13 PM IST
தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. கபினி அணையிலிருந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 61,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு 49,334 கன அடியாக உள்ளது.
மேலும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 2,566 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு 44 ஆயிரத்து 617 கன அடியாக உள்ளது. இதனால் தற்போது அணையின் நீர் மட்டம் 116 அடியாக உள்ளது. இந்நிலையில், அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக எல்லையில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 45,000 கன அடியாகவும், நண்பகல் நிலவரப்படி 5 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்து நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர்வரத்து காரணமாக நான்காவது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுப் பகுதி மற்றும் ஒகேனக்கல் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.