சென்னை: 'சத்யா', 'கம்பெனி', 'ஷிவா' என தனது தனித்துவமான படங்களால் தென்னிந்திய திரை உலகத்தை மட்டுமில்லாமல் ஹிந்தி திரையுலகத்தையும் உலுக்கியவர் ராம் கோபால் வர்மா. தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் இவரது படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இவர் இயக்கிய இரத்த சரித்திரம் எனும் படத்தில் சூர்யா நடித்துள்ளார்.
'ஷிவா' எனும் தெலுங்கு படத்தின் மூலம்தான் நடிகர் ரகுவரன் பிரபலமான நடிகராக மாறினார். இப்படி பல ட்ரெண்ட் செட்டிங்கான விசயங்களை செய்தவர் ராம் கோபால் வர்மா. தற்போது அவர் இயக்கும் படங்கள் பெரிதும் கவனம் பெறவில்லை என்றாலும் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மூலம் செய்திகளில் அடிக்கடி இடம்பெற்று வருகிறார் ராம் கோபால் வர்மா.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிப்பு பற்றி பேசிய ராம் கோபால் வர்மா, “நடிப்பு என்பது ஒரு கதாபாத்திரத்தை சார்ந்தது. அதே நேரம் நட்சத்திர நடிகர் என்பவர் அவருடைய பெர்ஃபாமன்ஸ் சார்ந்து இருப்பவர். இது இரண்டிற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா? என்று கேட்டால் என்னால் சொல்ல முடியவில்லை. அவரால் சத்யா திரைப்படத்தின் மனோஜ் பாஜ்பாய் நடித்த பிக்கு மாத்ரே கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது. ரஜினியை அப்படி பார்க்கவும் யாரும் விரும்பவும் இல்லை. ஸ்லோமோஷன் இல்லையென்றால் ரஜினிகாந்த் இல்லை.
ரஜினி எதுவுமே செய்யாமல் பாதி படம் முழுக்க நடந்தே வந்தாலும் கூட நீங்கள் பார்ப்பீர்கள். உங்களுக்கு அவரை அப்படிதான் பார்க்க பிடித்திருக்கிறது. அது உங்களுக்கு மிக அதிகமான மகிழ்ச்சியை தருகிறது. ரசிகர்கள் நட்சத்திர நடிகர்களை கடவுளுக்கு நிகராக பார்ப்பதால் வர்களால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடிவதில்லை” என்றார்.
இதையும் படிங்க: சூர்யாவின் கம்பீர குரலில் 'கிங்டம்' டீசர்... விஜய் தேவரகொண்டா புதிய பட அறிவிப்பு
மேலும் அமிதாப் பச்சன் பற்றி கூறும்போது, ”அமிதாப் பச்சன் ஒரு படத்தில் வயிற்று வலியுடன் இருப்பது போல காட்சியில் நடித்திருப்பார். பிக்கு (Piku) திரைப்படத்திற்கும் முந்தைய படம். என்னால் அந்த காட்சியை பார்க்கவே முடியவில்லை. கடவுள் மாதிரி பார்க்கும் ஒருத்தரை நாம் சாதாரணமாக பார்க்க விரும்பவில்லை. அதனால் தான் ஸ்டார்களால் நடிகர்களாக முடிவதில்லை. வர்களால் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவதில்லை" என ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.