நிலா பிள்ளையாருக்கு சோறு எடுக்கும் விழா.. ஈரோட்டில் கோலாகலம்! - தை பௌர்ணமி திருவிழா
🎬 Watch Now: Feature Video
Published : Jan 25, 2024, 11:11 AM IST
ஈரோடு: கொங்கு மண்டலத்தில் நிலா பிள்ளையாருக்கு சோறு எடுக்கும் விழாவானது சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பொங்கல் பண்டிகையின் போது கொண்டாடுவது வழக்கம்.
தை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று நிலா பிள்ளையார் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. பௌர்ணமி தினத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு முளைப்பாரி வைத்து, பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்கின்றனர். இந்த நிலையில் ஈரோடு கைகாட்டிவலசு திருவள்ளுவர் நகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், நிலா பிள்ளையார் வழிபாடு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மேலும் நகரின் மையத்தில் பிள்ளையாரை வைத்து சிறுமி ஒருவரை பிள்ளையாரின் மனைவியாக அலங்கரித்து வழிபட்டனர். அப்போது சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை கும்மியடித்து கோலாட்டம் ஆடி உற்சாகமாக கொண்டாடினர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண் கூறுகையில், "நிலா பிள்ளையார் வழிபாடு என்பது, பாரம்பரியமான ஒன்று. 5 நாட்கள் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பலவிதமான உணவு சமைத்து அதனை அனைவரும் பகிர்ந்து உண்போம். 6வது நாளில் ரசம் சாப்பாட்டுடன் விழா நிறைவு பெறும். இளைய தலைமுறையினருக்கு பாரம்பரிய விழாக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும், இனிவரும் காலத்திலும் இந்த விழா தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதே எங்களது ஆசை" என தெரிவித்தார்.