ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ! - SRIVILLIPUTHUR FOREST FIRE - SRIVILLIPUTHUR FOREST FIRE
🎬 Watch Now: Feature Video
Published : May 7, 2024, 3:00 PM IST
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயங்கள் இயங்கி வருகின்றன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, மிளா (கடமான்), காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளும், 250 வகையான பறவை வகைகளும் வாழ்ந்து வருகின்றன. மேலும், இப்பகுதியில் பல அரிய வகை மூலிகைச் செடிகளும் உள்ளன.
இந்த நிலையில், நேற்று கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,800 அடி உயரத்தில் அமைந்துள்ள விரியன் கோயில் பீட் என்ற பகுதியில் முழங்கால் முடிச்சான் பாறை என்ற பகுதியில் தீ பற்றியுள்ளது. இதன்படி, நேற்று இரவு அப்பகுதியில் பற்றிய தீ, சரணாலயப் பகுதி முழுவதும் பரவி பற்றி எரிந்து வருகிறது. இரவு நேரத்தில் தீ பிடித்ததால் அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும், நேற்று பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால், தீ படிப்படியாக கட்டுக்குள் வரும் என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள், மலைவாழ் மக்களின் உதவியோடு தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். திடீரென பற்றி எரிந்த காட்டுத் தீயால், பல அரிய வகை மூலிகைகளும், சிறிய வகை வனவிலங்குகள் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.