சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வீல் சேரில் வந்து வாக்களித்த 85 வயது மூதாட்டி! - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 20, 2024, 9:44 AM IST
தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்தவகையில், கும்பகோணம் மாநகரில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கிய சமயத்தில் பெரிய அளவில் கூட்டம் இல்லாத நிலையில் முற்பகலுக்கு பிறகு, சிறிது சிறிதாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியது.
குறிப்பாக, சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேனிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்குச்சாவடிகள் மற்றும் அதே போன்று, பாணாதுறை மேனிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்குச்சாவடிகளிலும் ஏராளமான பெண்கள் உட்பட பலர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நீண்ட நேரம் பொறுமையாக காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை சிறப்பாக நிறைவேற்றி மகிழ்ந்தனர்.
பல இடங்களில் கை குழந்தைகளுடன் ஏராளமான பெண்கள் தங்களது சிரமத்தைப் பொருட்படுத்தாமல் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். குறிப்பாக, வாக்களிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் ஆடுதுறை சேர்ந்த மூதாட்டி ரெங்கம்மாள் (85), தனது மகன் தனபால் (62) உடன் சக்கர நாற்காலியில் வந்து தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார்.
தள்ளாத வயதிலும், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்ற வருகை தந்த 85 வயது மூதாட்டியை அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.