மாதவிடாய் காலங்களில், பெண்களுக்கு வயிற்று வலி, முதுகு வலி மற்றும் உடல் வலிகள் ஏற்படுவது இயற்கையான ஒன்று தான். ஆனால், சில நேரங்களில் வலி அதிகமாகும் போது, வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது, பல நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாகவும், இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக எச்சரிக்கிறார் மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் அர்பனா ஹரித்வால்.
மாதவிடாயின் போது ஏன் வலி ஏற்படுகிறது?: மாதவிடாயின் போது, நமது உடல் புரோஸ்டாக்லாண்டின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது கருப்பையில் அழுத்தம் கொடுப்பதோடு, இரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது. இதனால், அடி வயிற்று வலி, முதுகு வலி மற்றும் உடலில் மற்ற பகுதிகளிலும் வலிகளை ஏற்படுத்துவதாக கூறுகிறார் மருத்துவர் அர்பனா ஹரித்வால்.
ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த வலி குறைவாகவும் சிலருக்கு அதிகமாகவும் இருக்கும். வலி அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது எனவும் அறிவுறுத்துகிறார்.
வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தலாமா?: மாதவிடாய் காலத்தில் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சிலருக்கு வலி கடுமையாக இருக்கும். இந்த வலியிலிருந்து நிவாரணம் பெற, பலரும் வலி நிவாரணி மாத்திரை உட்கொள்ளகின்றனர்.
ஆனால் இதுபோன்ற சுயமருந்துகளுக்குப் பதிலாக, மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றைப் பயன்படுத்துவது நல்லது என்கிறார் மருத்துவர். இது மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அதிகப்படியான அல்லது மீண்டும் மீண்டும் எடுத்துக்கொள்ளும் போது செரிமான பிரச்சனைகள் மற்றும் பிற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
வலி நிவாரணிகளை அதிகமாக பயன்படுத்தினால் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்படும் என 2018 இல் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் அண்ட் டிரான்ஸ்லேஷனல் ஹெபடாலஜி (JCTH) வெளியிட்ட Acetaminophen-Induced Liver Injury: Mechanisms and Clinical Implications" என்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும்போது என்ன நடக்கும்?:
- டாக்டர் அர்பனா ஹரித்வால் கருத்துப்படி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.
- மாதவிடாய் காலங்களில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
- வலி நிவாரணிகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது, வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இதனால், நெஞ்செரிச்சல், குமட்டல், வயிற்று வலி மற்றும் மார்பு இறுக்கம் போன்ற உபாதைகள் தோன்றத் தொடங்குகின்றன
- உடல் பலவீனமடையும்
- அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது, கல்லீரலின் செயல்பாடு பாதிக்கும்
- வயிற்று புண்கள் ஏற்படும் அபாயம் உள்ளது
- தூக்கம், பதட்டம் போன்ற உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்
- இது தவிர, இது நுரையீரலின் ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கிறது. இதனுடன், இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் குறைத்து, தோல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வலியில் இருந்து நிவாரணம் பெறுவது எப்படி?:
- மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெற வயிற்று பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். மேலும், தற்போது சந்தையில் கிடைக்கும் ஹீட் பேட்களை பயன்படுத்துவதும் சிறந்த நிவாரணம் தரும்.
- தாங்க முடியாத வயிற்று வலியின் போது, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மாதவிடாய் காலங்களில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்.
- உடலில் சுரக்கப்படும் எண்டோர்பின்கள் (Endorphins) எனும் ஹார்மோன் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கிறது. இந்த ஹார்மோன் உடற்பயிற்சி செய்யும் போது வெளியாவதால், மாதவிடாய் காலத்தில் 15 முதல் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
- நறுமண எண்ணெய்களைக் கொண்டு உடலை மசாஜ் செய்வதும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். மசாஜ் செய்யும் போது, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்பட்டு வலி குறையும். கூடுதலாக, அமைதியான மனநிலையை ஏற்படுத்தும்.
- உடல் சோர்வை நீக்க மற்றும் மனதைத் புத்துணர்ச்சியாக வைக்க ஒரு கப் டீ அல்லது காபி குடிக்கவும். வழக்கமான தேநீருக்கு பதிலாக, மூலிகை தேநீர் மாதவிடாய் வலியைக் குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது. இஞ்சி, பெருஞ்சீரகம், கெமோமில் மற்றும் செம்பருத்தி தேநீரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடனடி வலி நிவாரணியாக செயல்படுகிறது.
இதையும் படிங்க:
தாங்க முடியாத மாதவிடாய் வலியா?..இந்த 5 வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.