சென்னை: புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் 4 மாதங்களாக வழங்கப்படவில்லை எனக் கூறி புதுச்சேரியைச் சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் சுமார் ரூ.14 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறியது தொடர்பாக, செய்தித் தாள்களில் வெளியான செய்தியை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 8) இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “மனுதாரரின் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மூன்று அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு?: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - ஐகோர்ட் கேள்வி!
மேலும், “தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நியாயமாக விசாரணை நடைபெறும்” எனவும் உறுதி அளித்தார். இதனையடுத்து, நீதிபதிகள், “தவறு செய்தவர்களை சீர்திருத்துவதற்கு சிறைக்கு அனுப்புகிறோம். ஆனால் சிறையில் இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் தவறிழைப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்த விவகாரத்தில் தவறிழைத்த உயர் அதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறிழைத்ததற்கான முகாந்திரம் இருந்தால் சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர். பின் விசாரணையை விரைவுபடுத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.