சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் வரை அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் 10, +1, +2 வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு மார்ச் மாதம் துவங்க உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளில் உள்ள மொத்த பொதுத் தேர்வுகளையும் சேர்த்து 27 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக செய்முறை தேர்வுகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் ஆளுநர் கையில்! யுஜிசி வெளியிட்ட புதிய வரைவு!
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தமிழ்நாட்டில் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பள்ளி பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள், பிப்ரவரி ஏழாம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை, பிப்ரவரி 15ஆம் தேதி முதல், 21ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்முறை தேர்வுக்கான விதிமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், அதனை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும், மதிப்பெண்களை எவ்வாறு பங்கிட்டு வழங்க வேண்டும்" என்றும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.