சென்னை: சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் தாக்கியதாக குற்றசாட்டு எழுந்தது. இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும், சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த குழு, தனது விசாரணை அறிக்கையை வாரந்தோறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: மக்கள் காவல் நிலையங்களுக்கு செல்லவே அஞ்சுகின்றனர்; உயர்நீதிமன்றம் வேதனை!
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், சிறப்பு விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளில் ஒருவரான இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் மத்திய பணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ள ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால் மற்றும் சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொடர்பான வழக்கை விசாரித்து வருவதால், வேறு குழுவை நியமிக்க வேண்டும். மேலும், சிறுமியின் வாக்குமூலம் வெளியான விவகாரம் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சைபர் க்ரைம் பிரிவு அதிகாரியை நியமிக்கலாம் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் இரண்டு எப்.ஐ.ஆர் தொடர்பாக, சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பக்கெர்லா சிஃபஸ் கல்யாண் தலைமையில், சைபர் க்ரைம் ஆய்வாளர்கள் சாந்தி தேவி மற்றும் பிரவின் குமாரை நியமித்து உத்தரவிட்டனர். மேலும், விசாரணை தொடர்பான அறிக்கையை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவிற்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.