தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் இன்று (ஜூலை 28) விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், மெயின் அருவியில் திடீரென்று நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை.. ஐந்தருவியில் அலைமோதும் மக்கள்!
Published : Jul 28, 2024, 7:58 PM IST
இதனால் தற்போது ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஐந்தருவியின் வாகன நிறுத்துமிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்தனர். அதிலும் குறிப்பாக, ஆண்களை விட பெண்கள் வரிசையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒலிபெருக்கியின் மூலம் நகைகள் மற்றும் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
இதுமட்டுமல்லாது, கூட்ட நெரிசலைச் சமாளிக்க சுற்றுலாப் பயணிகளை பல்வேறு குழுவாக பிரித்து குளிப்பதற்கு காவல்துறையினர் அனுமதித்தனர். இதன் காரணமாக ஐந்தருவிக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.