தஞ்சாவூர்: திருநங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காகத் திருவோணம் காவல் நிலைய காவலரை பணிநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் காவல் நிலையத்தில் தற்போது காவலராக பணியாற்றி வருபவர் வினோத். இவர் கடந்த ஆண்டு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்த நிலையில், அப்பகுதியில் உள்ள திருநங்கை ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவருக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட திருநங்கை, தஞ்சாவூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில், துறை ரீதியாக நடைபெற்ற விசாரணையில், காவலர் வினோத் திருநங்கையை பாலியல் தொந்தரவு செய்தது உண்மை எனத் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, தற்போது திருவோணம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த வினோத்தை, தஞ்சை மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.