திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த நான்கு நாட்களாக தனது பேரன் நன்றாக இருந்த நிலையில் திடீரென உயிரிழந்ததாக கூறி குழந்தையின் தாத்தா மருத்துமனை வளாகத்தில் கதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அடுத்த பாராண்டபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். அவருக்கு ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ரம்யா என்பவருடன் திருமணம் ஆனது. இந்த நிலையில் கர்ப்பம் தரித்திருந்த ரம்யா பிரசவத்துக்காக ஊத்தங்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் குழந்தை மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஐந்து நாட்களாக பச்சிளம் குழந்தைகள் வார்டு பிரிவில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று( நவம்பர்.17) மாலை திடீரென குழந்தை உயிரிழந்துள்ளது.
இதனை அறிந்த உறவினர்கள் கண்ணீரோடு அந்த குழந்தையை கட்டை பையில் போட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து வெளிய எடுத்து வந்தனர். அப்போது குழந்தை தாத்தாவான சுரேஷ் கதறியவாறு, "ஐந்து நாட்கள் குழந்தை நன்றாக இருக்கிறது என்றுதானே கூறினார்கள். திடீரென எப்படி குழந்தை உயிரிழக்கும்?" என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: டிச.21 இல் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு - பாமக அறிவிப்பு..!
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், “மூளை சம்பந்தமான பிரச்சனை காரணமாக குழந்தை மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தற்போது வரை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தது. முடிந்தவரை நாங்கள் சிகிச்சை அளித்தோம் ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை குழந்தை உயிரிழந்தது,” என தெரிவித்தனர்.
"உயிரிழந்த குழந்தையின் உடலை முறைப்படி உரிய முறையில் பெற்றோரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் அப்படி செய்யாத தால்தான் கட்டப்பையில் குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை நேர்ந்தது," என குழந்தையின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்