திருநெல்வேலி: சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சி- யின் 88- வது நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லை வ.உ.சி மைதானம் அருகே உள்ள வ.உ.சி சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சர் மற்றும் அனைத்து கட்சியினரும் சேர்ந்து மத்திய நிதி குழுவை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான நிதிகள், குறைகளை எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
வயநாடு இடைத்தேர்தல்: அதனை தொடர்ந்து, வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் போது காங்கிரசின் தொண்டராக போட்டியிட்டார். தற்போது இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி உயர்ந்து நிற்கிறார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இரண்டு முறை போட்டியிட்டு வெற்றியை பெற்றுள்ளார். தற்போது போட்டியிடும் பிரியங்கா காந்தி அதனை விட அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றியை பெறுவார் என்றார்.
இதையும் படிங்க: ஆம்பூரில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு..காரணம் என்ன? - ஆர்டிஓ விசாரணை!
தருமபுரியில் விஜய் போட்டி?: தொடர்ந்து பேசிய அவர், அரசியல் கட்சி என்று வந்து விட்டால் அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தான் ஆக வேண்டும். நடிகர் விஜய் தருமபுரியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கட்சி தலைமை வெளியிடவில்லை. அரசியல் கட்சி ஆரம்பிக்கும் சினிமா நடிகர்கள் எல்லோரும் வெற்றி பெற்றவர்கள் கிடையாது. எல்லோரும் தோற்று போனதும் கிடையாது. எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர் போன்று வெற்றி பெற்று சரித்திரம் பெற்றவர்கள் உண்டு. அரசியல் கட்சிகளை பிரம்மாண்டமாக மக்கள் கூட்டத்தோடு தொடங்கி தோற்றவர்களும் உண்டு. நடிகர்கள் கட்சி வெற்றி பெறுவது மக்கள் கையில் உள்ளது'' என கூறினார்.
திமுக கூட்டணியில் விரிசல்: மேலும், திமுக தலைமையிலான கூட்டணி மிக பலமாக உள்ளது என தெரிவித்த திருநாவுக்கரசர், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியை பெறும். எடப்பாடி பழனிசாமி கூறுவதுபோல் திமுக கூட்டணியில் விரிசல் என்பதற்கான வாய்ப்பு இல்லை. எம்ஜிஆர் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது வெளி கொண்டு வந்த திட்டங்களுக்கு அவரது பெயரை பெரும்பாலும் சூட்டவில்லை. ஜெயலலிதா ஆட்சி அமைத்த பின்னர் திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டினார். அதனை தொடர்ந்து கலைஞர் பெயர் சூட்டப்பட்டது.
திட்டங்களுக்கு பெயர் வைப்பது தமிழகத்தில் மட்டுமல்ல, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும், யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களது பெயரை வைப்பது சகஜமான ஒன்று. திட்டங்களுக்கு பெயர் வைப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக விவாதத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைத்துள்ளார். அதற்கு உதயநிதி நான் வருவதாக கூறியுள்ளார். அந்த பிரச்சனை இருவருக்குமானது. மொத்தத்தில் விவாதம் என்பது நடைபெறாது. எனக்கான அடையாளத்தை அரசியலில் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர். கடவுளுக்கு நிகராக எம்ஜிஆரை கருதுகிறேன்... ஒருபோதும் அவருக்கு எதிரான கருத்துக்களை பேசமாட்டேன், பேசப்போவதும் இல்லை'' என திருநாவுக்கரசர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்