சென்னை: உலக குழந்தைகள் தினம் 2024 யூனிசெப் நிறுவனத்தின் மூலம் சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "நவம்பர் 14 இந்தியாவினுடைய குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். அதேபோல் உலக குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், குழந்தைகள் தினமான நவம்பர் 14ஆம் தேதி முதல் உலக குழந்தைகள் தினமான நவம்பர் 20ஆம் தேதி வரையில் ஒரு வாரம் குழந்தைகள் மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதில் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு , கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் என கொண்டாடப்பட சமுக நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
உலக குழந்தைகள் தினத்தின் கருப்பொருளாக குழந்தைகளின் எதிர்காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, குழந்தைகளினுடைய சம உரிமை, சுகாதாரம் , கல்வி ஆகியவற்றில் காது கொடுத்து கேட்டு குழந்தைகளுக்கு ஒரு களத்தை உருவாக்கி தரவேண்டும். எனவே, அத்தனை பேரும் குழந்தைகளினுடைய எண்ணங்களையும், உரைகளையும் கேட்டு அதற்கேற்றார் போல் திட்டமிட்டு செயல்படுவோம் என்பதை இன்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
யூனிசெப் நிறுவனம் சமுக நலத்துறையுடன் இணைந்து செயல்படுகின்றது. வளர் இளம் பெண்களின் பிரச்சனைகளுக்கு 1098 ஹெல்ப்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம். குழந்தை மற்றும் மாணவர் பருவத்தில் கலை உள்ளிட்ட திறன்களையும், கல்வியையும் கற்றுக் கொள்ளுங்கள். 40 வயதிற்கு மேல் குழந்தைகளை போல் குதித்து நடனமாட முடியாது.
இதையும் படிங்க: பார்சல் பிரியாணி சாப்பிட்டால் மலட்டுத்தன்மை? பிளாஸ்டிக் ஏற்படுத்தும் நோய்களின் முழு பட்டியல்..மருத்துவர் விளக்கம்!
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக மிக முக்கியம். கட்டாயம் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். இன்னும் சிலர் காலை உணவாக பிரட் மட்டும் போதும் என நினைக்கிறார்கள். ஏழு நாளும் வெறும் பிரட்டை மட்டும் காலை உணவாக எடுத்துக் கொண்டால் நமது தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு நமது உடலில் ஊட்டச்சத்து கிடைக்காது.
ஆகையால், சத்தான உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், தானிய வகைகள், நிலக்கடலை, கடலை மிட்டாய் போன்ற நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தை பருவத்தில் சத்தான உணவு எடுத்துக் கொண்டால்தான் வயதான பின்னர் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்.
அதிலும் குறிப்பா, பெண் குழந்தைகள் கட்டாயம் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். இன்னும் சில இளம்பெண்கள் அதிகம் சாப்பிடுவதே கிடையாது. நாம எல்லாரும் ஒன்னும் பேஷன் ஷோ போகப் போறதில்லை. ஆகவே, அனைவரும் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்" என அமைச்சர் கீதா ஜீவன் இளம் பெண்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்