சென்னை: இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா கதாநாயகனாகா நடித்துள்ள திரைப்படம் 'ஜாலியோ ஜிம்கானா'. இந்தப் படத்தில் பிரபு தேவாவுடன் அபிராமி, மடோனா, ரோபோ சங்கர், யோகி பாபு உட்படப் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் 'போலீஸ்காரனா கட்டிக்கிட்டா' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே போல் பாடல் வரிகள் இரட்டை அர்த்தமாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
ட்ரான்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் நவம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பாடல் தொடர்பாக படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்காமல் சக்தி சிதம்பரம் பாதியிலேயே வெளியேறினார்.
இதையும் படிங்க: திருமண நிகழ்ச்சியில் ஒரே வரிசையில் தனுஷ், நயன்தாரா - ஆனாலும் பாராமுகம்!
நிகழ்ச்சியிலிருந்து ஓடவில்லை: இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் தனியார் நிகழ்ச்சிக்குப் பேட்டி அளித்துள்ள இயக்குநர் சக்தி சிதம்பரம், இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "ஜாலியோ ஜிம்கானா நிகழ்ச்சியிலிருந்து ஓடவில்லை. அந்த நிகழ்ச்சி ஒரு கல்யாண வீடு கருமாதி வீடாக மாறவிட கூடாது என்பதற்காகதான் வெளியேறினேன்.
கேள்வி கேட்டிருந்தால் பதில் சொல்லிருப்பேன். ஆனால் பிரச்சினை செய்ய வேண்டும் என்ற நோக்கில் வந்தார்கள். இந்தப் படத்திற்கு முதலில் சாம்.சி.எஸ் இசையமைப்பதாக இருந்தது. தேவயாணி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர்கள் படத்தில் நடிக்கவில்லை, இசையமைக்கவில்லை.
அதுபோல்தான் முதலில் ஜெகன் கவிராஜ் பாடல் எழுதுவதாக இருந்தது. அவர் எழுதிய பாடல் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளேன். இதில் அவர் சொன்ன ஒரு வரி உள்ளது. ஒரு வரிக்காக அவரின் பெயரை பாடல் எழுதியவர் என போட முடியாது. அதற்காக அவரை படத்தில் நடிக்க வைத்துள்ளேன். நீங்கள் அளித்த பேட்டியில் இந்தப் பாடலை ஜெகன் எழுதியுள்ளார் என்று கூறியுள்ளீர்களே என்ற கேள்விக்கு? அது வாய்தவறி வந்துவிட்டது" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்